search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுப்படகு கவிழ்ந்தது"

    கடலில் பலத்த காற்று வீசியதால் நாட்டுப்படகு கவிழ்ந்தது. இதனால் 4 மீனவர்கள் தத்தளித்தனர். இதையடுத்து அவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.
    மணமேல்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவர் சொந்தமாக நாட்டுப்படகு வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாதவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சத்தியராஜ், பிரதீப், பால்ராஜ் ஆகிய 4 பேரும் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலில் இருந்து 17 நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென பலத்த காற்று வீசியது. இதில் எதிர்பாராதவிதமாக படகு தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனால் படகில் இருந்த மாதவன் உள்பட 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். பின்னர் காப்பற்றுங்கள்.... காப்பற்றுங்கள்.... என கூச்சலிட்டனர். இதைக்கண்ட அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேரையும் மீட்டு தங்களது நாட்டுப்படகில் ஏற்றினர். பின்னர் இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கரையில் ஆம்புலன்சுடன் தயார் நிலையில் இருந்தனர். பின்னர் 4 பேரும் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டுப்படகு கடலில் கவிழ்ந்ததால் அதில் இருந்த வலை, மீன்பிடி உபகரணங்கள் மூழ்கி சேதமடைந்தது. இதனால் தமிழக அரசு சேதமடைந்த பொருட்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×